விழுப்புரத்தில் மீண்டும் பரபரப்பு.. கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்..!!
Clash between two parties at temple festival in villupuram
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பழமுக்கல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்பொழுது பழமுக்கல் கிராமத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் பொழுது பழமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இளைஞர்களும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது நல்லாலம் கிராமத்தைச் சேர்ந்த ஆசிக் என்பவர் வழியாக சென்றுள்ளார். வழிமறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் வழி விடுமாறு கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பழமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆசிக்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து ஆசிக் தனது நண்பர்களுக்கு தெரிவிக்கவே நல்லாலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் ஆய்வாளர் அன்பரசு தலைமையில் பழமுக்கால் கிராமத்திற்கு விரைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பழமுக்கல் கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
English Summary
Clash between two parties at temple festival in villupuram