மாயத்தேவன்பட்டி கொடூர விபத்து - வேதனையில் முதல்வர் முக ஸ்டாலின்!
CM MK Stalin Condolence to Mayathevan Village Fire Accident
விருதுநகர் மாவட்டம், மாயத்தேவன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கவும் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மல்லி உட்கடை மாயத்தேவன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (14-08-2024) காலை சுமார் 09.20 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மல்லி உட்கடை நாகபாளையத்தைச் சேர்ந்த புள்ளகுட்டி (வயது 65) மற்றும் வத்திராயிருப்பு, குன்னூரைச் சேர்ந்த கார்த்திக் ஈஸ்வரன் (வயது 35) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போஸ் (வயது 35) மற்றும் மணிகண்டன் (வயது 31) ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM MK Stalin Condolence to Mayathevan Village Fire Accident