18 வகையான கோரிக்கை : ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!
coimbatore contract workers strike
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க அம்மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்தார். ஆனால் அந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தனர்.
இந்த போராட்டம் குறித்து, ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்த பின்னர் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அது தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அவர்கள் திட்டமிட்டபடி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி, கோவை மாநகரில் 3 ஆயிரத்து 500 தூய்மை பணியாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று காலை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தையும் நடத்தினர். ஆட்சியருக்கு மனு கொடுத்த பின்னர் தூய்மை பணியாளர்கள் தெரிவித்ததாவது,
"குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியில் சேர்க்க வேண்டும் என்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தொடர்ந்து இன்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் அவர்கள் பணிக்கு செல்லவில்லை. தூய்மை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மாநகர பகுதிகளில் சுகாதார பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது
English Summary
coimbatore contract workers strike