தேர்தல் நேர்மையாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.! மாநகராட்சி ஆணையர் அதிரடி.!
Corporation commissioner Instructions
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவினை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்திட தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கி பணியாற்றிட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022-ஐ முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த 27 ஆயிரத்து 812 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 31.01.2022 அன்று நடைபெற்றது. தொடர்ந்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்பு இன்று (10.02.2022) 21 இடங்களில் உள்ள மையங்களில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், சக்கரபாணி காலனியில் உள்ள மான்ஃபோர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் இன்று (10.02.2022) நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அவர்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியினை பார்வையிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கிக் கூறினார். மேலும், வாக்குப்பதிவினை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கி பணியாற்றிடவும் அறிவுறுத்தினார். இந்தப் பயிற்சி வகுப்புகளில் காணொளி காட்சி வாயிலாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆணையாளர் அவர்கள் அடையாறு மண்டலம், சின்னமலை, வார்டு-171, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/துணை ஆணையாளர்கள் திரு.சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., அவர்கள், ஆலந்தூர் மண்டல தேர்தல் பார்வையாளர் திரு.வி.முத்துசுவாமி அவர்கள், அடையாறு மண்டல தேர்தல் பார்வையாளர் திரு.எஸ்.வெங்கடேஷ், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Corporation commissioner Instructions