ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் செல்லுங்கள் - தமிழக அரசுக்கு ஆலோசனை கூறும் மார்க்சிஸ்ட்!
CPIM Say About RN Ravi SC case TNGovt
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார்.
இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய அரசுக்கு ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனுவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆளுநர் தனது போக்கினை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக, இரண்டாண்டு சம்பவங்களை எல்லாம் தொகுத்து கடந்த மே 4 அன்று ஒரு ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டி என்கிற பெயரில் உண்மைக்கு மாறானவைகளையும், அவதூறுகளையும் தெரிவித்துள்ளார். வழக்கம்போலவே தனது வரம்பை மீறி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழகத்தின் மீதும், தமிழ்நாடு அரசின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் அவதூறுகளை அள்ளிப்பொழிந்துள்ளார்.
குற்றச்செயல்கள் நடப்பதால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்லும் முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியான ஆளுநர் சட்டம் - ஒழுங்கு அல்லது அமைதி என்பது தனிப்பட்ட சம்பவங்கள் என்று பொருள் கொள்ளாது என்பதை அறியாதவர் அல்ல. குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமலிருந்தாலோ, குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்காமலிருந்தாலோ அல்லது ஒரே மாதிரியான குற்றங்கள் தொடர் நிகழ்வாக இருந்தாலோ அவை தீவிரமான குற்றங்களாக இருந்தாலோ மட்டுமே சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதைவிடுத்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் தமிழகம் அமைதியற்ற மாநிலம் என ஆளுநர் குறிப்பிடுவது தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதாகும்.
தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும், தான் கொடுத்தபுகார் மீது முதல் தகவல் அறிக்கையே கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார். இவரது வாகனம் சென்ற பிறகு சிலர் கருப்பு கொடி கட்டிய கம்பை வீசியிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொருன்றும் நடந்ததாக எங்கும் பதிவாகவில்லை. ஆனால் 19.4.2022 அன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 312/2022 என்ற எண்ணில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என ஆளுநர் காவல்துறையை குற்றம் சொல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இதேபோன்று தமிழ்நாடு அரசாங்கமும், சமூக நலத்துறையும், காவல்துறையும் சிதம்பரம் தீட்சிதர்கள் மத்தியில் வழக்கமாக நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளை திசை திருப்ப ஆளுநர் முயல்கிறார். இதற்கு முன்பும் இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக இவர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு டி.ஜி.பி. முறையாக அப்படி எதுவும் நடக்கவில்லை என பதில் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் பொதுவெளியில் இப்பிரச்சனையை எழுப்புவது குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதற்கு துணை போனவர்களை காப்பாற்றுவதற்கும், அவர் தொடர்ச்சியாக பேசி வரும் சனாதனத்தை காப்பாற்றுவதற்காகவும் ஆளுநரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது தெளிவு.
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள நூலகங்களில் அனைத்து மொழி புத்தகங்கள் இருப்பது போலவும், தமிழ்நாட்டில் பிற மொழி புத்தகங்கள் இல்லை என்பது போலவும் அவதூறுகளை அள்ளித்தெளித்துள்ளார். இப்படி அரசுப்பணத்தை முறையின்றி செலவழித்தது, பொறுப்பின்றி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது, மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமலிருப்பது, தனியார் அரசு சாரா அமைப்புக்கு ஏஜெண்டு போல அரசாங்கத்தை குறை கூறுவது என்று ஒவ்வொரு அம்சத்திலும் மிக மோசமாகவும், தவறான உள்நோக்கத்துடனும் இந்த பேட்டி அளித்துள்ளார்.
எனவே, ஆளுநரின் இத்தகைய சட்டவிரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை இனியும் அனுமதிப்பது முறையல்ல. ஏற்கனவே, ஒன்றிய அரசிடம் அளித்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள மறுத்துள்ளதுடன் ஆளுநரை தங்களுக்குச் சாதகமாக ஒன்றிய அரசு இயக்கி வருவது பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் சாசன வரம்புகளுக்கு மீறி செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வற்புறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
English Summary
CPIM Say About RN Ravi SC case TNGovt