ஒரு வார்த்தை, ஒரு தற்கொலை! கடலூர் மூவர் கொலை விவகாரத்தில் கொலையாளிகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!
Cuddalore 3 hacked to Death case
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியை அடுத்த காராமணிக்குப்பத்தில் தாய், மகன் மற்றும் பேரன் என மூன்று பேரையும் வெட்டி கொலை செய்து, வீட்டுக்குள் வைத்து எரித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
காராமணிக்குப்பத்தில் உள்ள ராஜா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கமலீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுரேந்திரகுமார் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார். இளையமகன் சுகந்த்குமார் ஹைதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
சுகந்த்குமாரின் தந்தை சுரேஷ்குமார் கடந்த 6 மாதத்துக்கு முன் உயிரிழந்த நிலையில், அவர் மாதத்தில் 15 நாட்கள் ஹைதராபாத்திலும், 15 நாட்கள் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனது வீட்டில் அவரது தாய் மற்றும் தனது மகன் நிஷாந்த் உடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி காலை வேளையில் சுகந்த்குமாரின் வீடு பூட்டப்பட்டிருந்ததை அடுத்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டப்பட்டிருந்த சுகந்த்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு கமலீஸ்வரி, சுகந்த்குமார், நிஷாந்த் ஆகிய மூவரும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் சுகந்த்குமார் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வரும் சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் சாகுல் ஹமீது ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சங்கர் ஆனந்தின் தாயார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு சுகந்த்குமார் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கமலேஸ்வரி சங்கர் ஆனந்தினை அனாதை என திட்டியுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் கமலீஸ்வரி, சுகந்த்குமார், நிஷாந்த் ஆகிய மூவரையும் நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சங்கர் ஆனந்த் அவர்கள் மூவரையும் கொலை செய்தது மட்டுமில்லாமல், நண்பன் சாகுல் ஹமீது உதவியுடன் கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடலையும் வீட்டுக்குள் வைத்து எரித்து வீட்டின் வெளியே பூட்டி வைத்துள்ளனர். சங்கர் ஆனந்த் மற்றும் அவரது நண்பன் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
English Summary
Cuddalore 3 hacked to Death case