தமிழகம் முழுவதும் தாமதமாகும் ஆவின்பால் விநியோகம்! உடனடி தீர்வு காணுமாறு தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் தாமதமாகும் ஆவின் பால் விநியோகத்திற்கு உடனடி தீர்வு காணுமாறு தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆவின் பால் மிகவும் காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் வேலப்பாடி, கஸ்பா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4.00 மணிக்குள் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த ஆவின் பால் விநியோகம் காலை 10.00 மணி கடந்த நிலையில் தான் இன்று வரையிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநில நிர்வாகிகள் வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் ஆவின் பாலினை விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

அதுமட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் தொடர்ந்து தாமதமாக நடைபெற்று வருவதால் காலை நேரத்தில் பால் வாங்கும் பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கிக் கொள்கின்றனர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு முதல் நாளே பணம் கட்டி, ஆர்டர் கொடுக்கப்பட்ட, தாமதமாக விநியோகம் செய்யப்படும் ஆவின் பாலினை பால் முகவர்கள் விற்பனை செய்ய முடியாமல் தங்களின் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுடன் அந்த பாலினை மறுநாள் வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதிப்படுவதோடு அதன் மூலம் கடுமையான பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஆவின் பால் விநியோகத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருவதற்கான காரணமாக ஆவின் பால் பண்ணைகளில் பணியாளர்கள் மற்றும் பால் பாக்கெட்டுகள் அடுக்கி கொண்டு வர பயன்படும் பிளாஸ்டிக் டப்புகள் பற்றாக்குறை ஒருபுறம் என்றால் பால் கொள்முதல் நிலையங்களில் இருந்து பால் பண்ணைகளுக்கு பால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் சம்பந்தப்பட்ட டேங்கர் லாரி உரிமையாளர்கள் தாமதமாக பால் ஏற்றி வருவதாகவும் அதனால் தான் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டு விநியோகமும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே ஆவின் பால் தாமதமாக விநியோகம் செய்யப்படும் பிரச்சினையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு பால் பண்ணைகளில் பற்றாக்குறையாக உள்ள பணியாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பால் டப்புகளின் தேவையை பூர்த்தி செய்து, பொதுமக்களுக்கு பால் முகவர்கள் குறித்த நேரத்தில் ஆவின் பாலினை விநியோகம் செய்யத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அத்துடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பால் குளிரூட்டும் நிலையங்கள் (MCC), மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களில் (BMC) பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஆவின் பால் பண்ணைகளுக்கு பால் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தத்தை தற்போதைய வாகன எரிபொருட்களின் விலைக்கேற்ற வகையில் உடனடியாக மாற்றியமைத்து அதனை புதுப்பிக்க உத்தரவிட்டு, பால் கொள்முதல் நிலையங்களில் இருந்து பால் பண்ணைகளுக்கு பால் தாமதமின்றி கொண்டு வர தேவையான உத்தரவை பிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dairy agents association demand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->