தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி...நேரில் நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்!
Dayalu Ammal admitted to hospital MK Stalin enquires about his health
மூச்சுத் திணறல் காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் வயது மூப்பின் காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் ,உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்போலோ ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்றார்.இதையடுத்து அங்கு தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த நிலையில், மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று தயாளு அம்மாளை பார்த்து, அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.அப்போது அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். அதனை தொடர்ந்து மு.க.அழகிரியும் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று தாயார் தயாளு அம்மாளைப் பார்த்துவிட்டு, அவரது உடல் நிலை, சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் மு.க.அழகிரி கேட்டறிந்தார்.

மேலும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் 12 மணியளவில் ஆஸ்பத்திரிக்கு வந்து பாட்டி தயாளு அம்மாளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து தாயார் தயாளு அம்மாள் குடும்பத்தினர் அப்போலோ ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
English Summary
Dayalu Ammal admitted to hospital MK Stalin enquires about his health