கொலை வழக்கில் விடுதலையான திமுக முன்னாள் எம்எல்ஏ! சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்!
DMK Ex MLA Ranganathan case Court order
கொலை வழக்கு ஒன்றில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சிபிஐ பதில் அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது, அந்நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனை அடுத்து சிபிஐ அதிகாரிகள் திமுக முன்னாள் எம்எல்ஏ புரசைவாக்கம் ரங்கநாதன், சையது இப்ராஹிம், செல்வம், சதீஷ், பாலச்சந்திரன் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், திமுக எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரம்பிக்கப்படாததால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மகேஸ்வரன் மனு குறித்து, சிபிஐ மற்றும் திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேரும் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
English Summary
DMK Ex MLA Ranganathan case Court order