மேகதாது அணை கட்டப்படும் - முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? Dr.அன்புமணி இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேசி 3 நாட்களாகியும் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார். சித்தராமையாவின் இந்த  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்த பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பது தான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 

2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணை கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்த துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn to TN and Karnataka CM for Megathathu Dam issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->