பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விருதுநகரில் கைது..!!
Famous rowdy Varichiyur Selvam arrested in Virudhunagar
மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்த செல்வம் என்பவர் பிரபல ரவுடியாக இருந்து வரும் நிலையில் இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவரது கூட்டாளியான செந்தில் என்பவர் காணாமல் போனதாக அவர் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் செந்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கருத்து வேறுபாடு காரணமாக கூட்டாளியாக இருந்த வரிச்சியூர் செல்வமும், செந்திலும் பிரிந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் அழைப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற அவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விருதுநகரில் வைத்து ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாஜகவில் ஏற்பட்ட சில உட்கட்சி பிரச்சனையின் போது திருச்சி சூர்யாவுடன் ஏற்பட்ட சில கருத்து மோதல்களில் வரிச்சியூர் செல்வத்தின் பெயர் அடிபட்டது. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Famous rowdy Varichiyur Selvam arrested in Virudhunagar