அம்பத்தூரில் பரபரப்பு... கெமிக்கல் கம்பெனி அலுவலகத்தில் தீ விபத்து..!!
Fire accident in ambattur chemical company at mid night
சென்னை அடுத்த அம்பத்தூர் தொழில்பேட்டையில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் & டாய்லெட் ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையை நடத்தி வருகிறார். அதன் அருகே கேஸ் ஏஜென்சி அலுவலகம் மற்றும் கட்டுமான அலுவலகத்தை நடத்தி வருகிறார். ராம்குமார் வழக்கம்போல் நேற்று இரவு 10 மணி அளவில் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு காவல் பணியில் செல்வராஜ் என்பவர் இருந்து வந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் நிறுவனத்திற்கு சொந்தமான ஆவண அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்ட செல்வராஜ் உடனடியாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜே.ஜே நகர் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
தீயணைப்பு வீரர்களின் இரண்டு மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் சிலிண்டர் ஏஜென்சி அலுவலகத்தில் இருந்த சிலிண்டர் உருளைகளை அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
English Summary
Fire accident in ambattur chemical company at mid night