சென்னையில் நடந்த சோதனையில் சிக்கிய வெளிநாட்டு பணங்கள்! நான்கு பேரிடம் தீவிர விசாரணை!
Foreign money caught in the raid in Chennai
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்தான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் வழங்கி உள்ளது.
அதன் அடிப்படையில் தமிழக முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினரின் தகவலின் படி நேற்று காலை 5 மணி முதல் மாலை வரை சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் பூக்கடை துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீசார் நான்கு வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்னை ஏழு கிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவுபீக் அகமது, மண்ணடி சைவ முத்தையா தெருவை சேர்ந்த ஆரூன் ரஷீத், மன்னடி அங்கப்பநாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா, கொடுங்கையூர் வள்ளுவர் தெருவை சேர்ந்த முகமது தப்ரீஸ் ஆகியோர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முகமது தப்ரீஸ் மென் பொறியாளர் என்பது தெரிய வந்த நிலையில் ஆரூன் ரஷீத் வீட்டில் ரூ.4.9 லட்சம் சீனா, தாய்லாந்து, மியான்மர், சிங்கப்பூர் நாடுகளில் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவருக்கு சொந்தமான மண்ணடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.10.30 லட்சம் மற்றும் லேப்டாப், கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், டிஜிட்டல் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்திய ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் குறித்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் ஜமேஷா முபின் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
English Summary
Foreign money caught in the raid in Chennai