தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க ஓர் அறிய வாய்ப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!
free study in private schools in tamilnadu
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரும், இலவச கட்டாயகல்வி உரிமை சட்ட மாநிலமுதன்மை தொடர்பு அதிகாரியுமான எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், "ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பணிகள் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
ஏப்ரல் 10-ம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அதன் விவரங்களை எமிஸ் தளம் மற்றும் பள்ளியின் முகப்பு வாயிலில் பலகையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.
விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள், வட்டார கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலங்களில் பதிவேற்றம் செய்ய தேவையான ஸ்கேனர் வசதி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
நேரடியாக விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு பள்ளி ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும். பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழை ஆய்வு செய்து வயது குறித்து பெற்றோர் உறுதிமொழி படிவத்தில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அரசு உத்தரவின்படி 2020 ஆகஸ்ட் 1 முதல் 2021 ஜூலை 31க்குள் பிறந்திருக்கும் குழந்தைகள் எல் கே ஜி வகுப்பிலும், முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2018 ஆகஸ்ட் 1 முதல் 2019 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 28ஆம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை பணிகள் நடத்தப்படும். சேர்க்கைக்கு தேர்வானவர்களின் விவரங்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியல் மே 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இதற்கான குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
free study in private schools in tamilnadu