ஸ்தம்பிக்க போகும் "தமிழகம்".. ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு "அரசு டாக்டர்கள்" ஆதரவு..!!
Government doctors association support Jaccto geo protest
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு "அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து தேர்தலை சந்தித்தது.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வகையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்துக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். இதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று 23 மாதங்கள் ஆன நிலையிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
இதன் காரணமாக திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சட்ட போராட்ட குழு ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அக்குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை "ஜாக்டோ ஜியோ என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்ட குழுவினரும் பங்கேற்க உள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தில் 19 ஆயிரம் அரசு டாக்டர்கள் உள்ளனர். அனைத்து அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ள பழைய ஓய்வூதி திட்டம் குறித்தான கோரிக்கையை முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Government doctors association support Jaccto geo protest