தமிழக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கவசத்துக்கு பதிலாக 'டீ கப்'! அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்!
Government hospital oxygen mask instead tea cup
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளார். ஆசிரியர்கள் அந்த மாணவரின் பெற்றோருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று மாணவரை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவரை மருத்துவர்கள் பரிசோதித்து முதலில் அவருக்கு முறையாக சுவாசம் அளிக்க ஆக்சிஜன் நாசி மாஸ்க் பொருந்துமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
உடனே அந்த மாணவரை வார்டில் அனுமதித்து மாஸ்க் பொருத்த முடிவு செய்துள்ளார்கள். ஆனால் மாஸ்க் இல்லாததால் ஒரு டீ கப்பில் துவாரம் போட்டு அதை ஆக்சிஜன் சிலிண்டரில் இருக்கும் டியூபுடன் இணைத்து மாணவர் கையில் கொடுத்து மூக்கில் வைத்து பிடித்து கொள்ளும்படி தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த மாணவர் சிரமப்பட்டு அதனை பிடித்து சுவாசித்ததை பார்த்த நோயாளி ஒருவர், அவரது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
பின்னர் வீடியோ எடுத்தவர் இது குறித்து தெரிவிக்கும் போது, இதை போல் டீ கப்பை பயன்படுத்தி சுவாசிப்பது இங்கு முதல் முறையல்ல. கடந்த வாரமும் ஒருவருக்கு பொருத்தி இருந்ததை பார்த்தாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களிடம் மாஸ்க்குக்கு பதில் டீ கப்பை பயன்படுத்தியது ஏன்? மாஸ்க் இல்லையா? என கேட்டதற்கு அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒரு பக்கம் இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருந்தாலும் அவசரத்துக்கு சமயோகிதமாக செயல்பட்ட மருத்துவ ஊழியர்களை பாராட்டுவதை தவிர வேறு வழியில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அவர் உடனடியாக மருத்துவ பணிகள் இயக்குனரிடம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
Government hospital oxygen mask instead tea cup