வாக்குச்சாவடி முகவர்களுக்கான அறிவுரை. தேர்தல் ஆணையம் வெளியீடு.!
Instructions for Booth Agents
வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி சின்னம், அடையாளங்களை அணியக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி முகவர்களுக்கான வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதில்,
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்குப்பதிவு கருவிகள் முறையாக இருக்கிறதா என்பதை முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதே போல் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், முறையாக மூடி முத்திரை இடப்படுவதை உறுதி செய்துகொள்வதுடன் விரும்பினால் தன் முத்திரையையும் அதில் பதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளரும் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும், வாக்குச்சாவடி முகவர்கள் தங்களின் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது தேர்தல் சின்னம் அடங்கிய எவற்றையும் உடன் வைத்து கொண்டு வாக்குச்சாவடியினுள் பணியாற்றக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சைகை மூலமாகவோ அல்லது சங்தேகக் குறிகள் உள்ளிட்ட எந்த வகையிலும் எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்கத் தூண்டக்கூடாது என்றும் மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் சார்பாக வாக்குச்சாவடி மையத்திற்குள் தேர்தல் பணியில் ஈடுபட வாக்குச்சாவடி முகவர், வேட்பாளரால் நியமிக்கப்படுகிறார். அந்த முகவர், வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றால் வாக்குச்சாவடி தலைமை அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவ்வாறான முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க உதவலாம்.
மேலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அந்த வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள், வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் தாள் முத்திரைகள் ஆகியவற்றின் வரிசை எண்களைக் குறித்துக் கொள்ளலாம். வாக்குப்பதிவு கருவிகள் வாக்கெடுப்புக்காகத் தயார் செய்யப்படும் முன் அவற்றுள் விதிமுறைகளின் கீழ் இருக்க வேண்டிய அடையாள அட்டைத் துண்டு தவிர, வேறு எதுவும் இல்லை என்பதையும் பார்வையிட்டு வாக்குச்சாவடி முகவர் உறுதி செய்து கொள்ளலாம்.
English Summary
Instructions for Booth Agents