பாசன நீர் வழித்தடங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுவதை தமிழக அரசு கைவிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


பாசன நீர் வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றிப் பல்லுயிர் பெருக்கத்தை அழிக்கும் கொடுஞ்செயலைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆறுகளிலிருந்து பாசன வசதி தரும் நீர்வழித்தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மற்றும் தமிழ்நாடு அரசின் செயல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தரகு கமிசனுக்காகத் தமிழ்நாட்டுக் கிராமங்களைப் பாலைவனமாக மாற்றும் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் பொறுப்பற்றத்தனம் வன்மையான கண்டனத்திற்குரியது.

கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரிணை கொண்டு சேர்ப்பதாகக் கூறி காவிரி ஆற்றின் கல்லணைக் கால்வாய், பவானி சாகர் அணையின் கீழ்பவானி வாய்க்கால் உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆறுகளிலிருந்து பாசனவசதி தரும் நீர்வழித் தடங்களைக் கான்கிரீட் தடங்களாக மாற்றும் தமிழ்நாடு அரசின் செயல் அறிவியலுக்குப் புறம்பானது.

நீர்வழித் தடங்களைக் கான்கிரீட் தளங்களாக மாற்றுவதினால் இடைப்பட்ட பாசன கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்று முழுதாக அற்றுப்போகும் பேராபத்து ஏற்பட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனமும் பெருமளவு பாதிக்கப்படும். மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் முதலிய நீர்நிலைகளை நிரப்புவதற்கான நீரும் போதிய அளவு கிடைக்காமல் போவதோடு, அவை எளிதில் வறண்டு போகும் சூழலும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி, தாவரங்கள், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான நீரும் பறிபோவதோடு, மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கமும் குறைந்து விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் மண்புழு உள்ளிட்ட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் அருகி, மண்வளம் குன்றுவதால் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஏற்கனவே, பரம்பிக்குளம் – ஆழியாறு வாய்க்காலில் கசிவுநீர் மூலம் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, நீர்வழித்தடம் கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டதினால் பாசன நீர் வேகமாக வெளியேறி, பெருமளவு நீர் இழப்பு ஏற்பட்டது. 

இதன் காரணமாக கடைமடைக்குக் கிடைத்து வந்த நீரும் அதன்பின் கிடைக்கப்பெறாமல் போய்விட்டது. மேலும், கடந்த 2013 ஆம் ஆண்டுக் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததனை அடுத்து, அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஏற்கனவே இத்திட்டத்தைக் கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனை உணர்ந்தே தற்போது தொடர்புடைய பாசன கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கான்கிரீட் தளம் அமைப்பது ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமே தவிர, விவசாயிகளுக்குச் சிறிதளவும் உதவாது என்றுகூறி கிராமசபைக் கூட்டங்களிலும் கான்கிரீட் தளத்திற்கு எதிராகத் தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

கடைமடைகளுக்கு நீர் சென்று சேர்ப்பதில் திமுக அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமாயின், பல ஆண்டுகளாகத் தூர்வாராமல் உள்ள பாசன வாய்க்கால்களையும், கால்வாய்களையும், சிறு ஓடைகளையும் முறையாகத் தூர்வாருவதும், கரைகளை வலுவாகப் பலப்படுத்துவதுமே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனை விடுத்து, விவசாயிகளின் எதிர்ப்பினையும் மீறி தற்போது மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்க திமுக அரசு முனைவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, பல்லுயிர் பெருக்கத்தை அழித்துச் சுற்றச்சூழலையும், விவசாயத்தையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் கடுமையாகப் பாதிக்கின்ற கொடிய திட்டமான பாசன நீர்வழித் தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Irrigation canals should not be concreted


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->