உதயநிதியை படுகொலை செய்ய அறைகூவலா? வரிந்துகட்டி வரும் திமுக கூட்டணி கட்சி!
K Balakrishnan condemn to Ayothi samiyar
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்னன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே உண்மைக்கு மாறாகப் பேசி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு பரவலான கண்டனம் எழுந்துள்ளபோதும், தேவைப்பட்டால் பரிசுத்தொகையை அதிகரிக்கத் தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக படுகொலை செய்ய அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல் ஆகும்.
ஒரு மடாதிபதியே கொலை வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது ஆகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்த யாரும் இதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பது இத்தகைய கிரிமினல் நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகும்.
உ.பி. மாநில அரசு, சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அயோத்தி சாமியாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்" என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
K Balakrishnan condemn to Ayothi samiyar