கள்ளச்சாராய சம்பவம் : முக்கிய குற்றவாளியை தப்ப விட்ட போலீசார் ஆயுதப் படைக்கு மாற்றம்..!
Kallakurichi Spurious Liquor Seller Escaped Issue Cops Transferred to Armed Force
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் , மாதவசேரி ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் அருந்தியதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வோரையும், கடத்தலில் ஈடுபடுவோரையும் உடனடியாக கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட சரகத்தில் கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்பட்டதாக இதுவரை 86 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் என்ற ஊரைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரியான 42 வயதான மணிகண்டன் என்பவரை சங்கராபுரம் போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்து மணிகண்டன் தப்பி விட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போலீசார், அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் அவர் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகித்து, அங்கு கள்ளச் சாராய வியாபாரி மணிகண்டனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச் சாராய வியாபாரி மணிகண்டனை விசாரணையின் போது தப்ப விட்ட 3 சங்கராபுரம் போலீசாரை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Kallakurichi Spurious Liquor Seller Escaped Issue Cops Transferred to Armed Force