கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு தொடக்கம் - எப்போது தெரியுமா?
keezhakarai jallikattu apply start
பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு தான். இந்த ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற ஊர் என்றால் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர். அதனால், இந்த ஊருக்கு அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, கீழக்கரை கிராமத்தில், வகுத்துமலை அடிவாரத்தில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் இந்த பணிகள் நிறைவடைந்து ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயாரானது.
இந்த அரங்கத்தை வருகிற 24-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையடுத்து இந்த அரங்கத்தில் திறப்பு விழாவன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள இருக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று (19-ந் தேதி) மதியம் 12 மணி முதல் நாளை (20 -ந்தேதி) மதியம் 12 மணி வரை பதிவு செய்திட வேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
keezhakarai jallikattu apply start