ஆண்டிபட்டி நெசவாளர்களுக்கு தறி உபகரணங்கள்.. எம்எல்ஏ மகாராஜன் வழங்கினார்!
Loom accessories for Andipatti weavers MLA Maharajan presented
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை எம்எல்ஏ மகாராஜன் வழங்கினார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதியில் சுமார் 700க்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் பெடல் தறிகள் செயல்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இந்தப்பகுதியில் 7 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களின் தமிழக அரசின் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
வேட்டி சேலைகள் உற்பத்தி செய்வதற்கு நூல் போன்ற மூலப்பொருட்கள் அரசால் வழங்கப்பட்டு, உற்பத்தி செய்த வேட்டி சேலைகளை அரசே கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த நெசவாளர்களுக்கு ஆண்டுதோறும் தறிக்கு தேவையான உபகரணங்கள் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று சக்கம்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க வளாகத்தில் நெசவாளர்களுக்கு தறி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி கைத்தறி ஆதரவு திட்டம் 2024-2025 கீழ் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான தறி உபகரணங்களான அச்சு மற்றும் விழுதுகள் சுமார் 200 நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரவிக்குமார் மற்றும் திமுக பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கைத்தறி துறை அலுவலக பணியாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
Loom accessories for Andipatti weavers MLA Maharajan presented