பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
madurai High Court orders for Scheduled people enter the temple
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "பழனி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவிலில் பொதுமக்கள் வழிபட்டு வந்திருந்தனர். ஆனால், கடந்த 10 வருடமாக பட்டியலினத்த மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட விடாமல் உயர் சாதியை சேர்ந்த சிலர் தீண்டாமையை கடைபித்து வருகின்றனர்.
இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், எங்கள் சாதி மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தீண்டாமையை கடைப்பிடித்து வருகின்றனர். இது சட்டவிரோதமான ஒன்று. எனவே தீண்டாமையை கடைபிடிக்கும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் சமூக மக்களையும் வழிபாடு செய்வதற்கு அனுமதித்து உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், அரசின் மூத்த வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி,
"கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். சாமி கும்பிடுவதில் எந்த பாகுபாடும் பார்க்கக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இதுபோன்று அரசின் சட்டத்தை மீறுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள், பட்டியல் இன மக்கள் செல்ல விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவையும் பிறப்பித்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமான பதிலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
English Summary
madurai High Court orders for Scheduled people enter the temple