தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு சரியாக நடைபெறவில்லை - அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.!
madurai highcourt order for hundard days work scheame
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
"தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளின் பொறுப்பாளராக இரண்டு பெண்கள் இருக்கின்றனர். இவர்கள் இந்த நூறுநாள் வேலையை பொது இடங்களில் செய்ய விடாமல் அவர்களது உறவினர் தோட்டத்தில் உள்ள கரும்புகளுக்கு உரம் வைத்தல் மற்றும் தென்னை மரங்களை பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதனால் அரசுக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சரியான இடத்தில் நடத்துவதற்கும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இருந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள், நேரம், இடம் போன்றவற்றை ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக நடைபெறவில்லை.
ஆகவே, இந்த வழக்கில் அரசின் ஊரக வளர்ச்சித்துறை செயலரை சேர்க்க வேண்டும். பின்னர் இந்த திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு, இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜனவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
English Summary
madurai highcourt order for hundard days work scheame