மருமகனை கொலை செய்த மாமனார் கைது!
Man arrested for killing son in law
அம்மிக்கல்லால் தாக்கி மருமகனை கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் மாடசாமி . 23 வயது கட்டிட தொழிலாளியான இவருக்கும், புதியம்புத்தூரை சேர்ந்த சங்கீதாவுக்கும் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.மாடசாமி புதியம்புத்தூர் கீரைத் தோட்டதெரு பகுதியில் ஒரு வீட்டில் தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் மனைவியின் அக்காள் குடும்பத்தினரும் மற்றும் மாமனார் சரவணகுமார் ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.
மாடசாமி குடி பழக்கத்துக்கு அடிமையானதால் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன் மனைவி சங்கீதாவிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்தநிலையில் தான் கடந்த 17-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வந்த மாடசாமி தன் மனைவி சங்கீதாவிடம் மட்டன் குழம்பு கேட்டு தகராறு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மனைவி சங்கீதாவை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன் என்றும் மிரட்டி குடிபோதையில் இருந்த மாடசாமி தன் மனைவியை அடித்துள்ளார். இதைப்பார்த்த சங்கீதாவின் அக்காள் கணவர் ஆதிலிங்கம் மற்றும் மாமனார் சரவணகுமார் ஆகியோர் மாடசாமியை கண்டித்துள்ளார். அப்போது சரவணகுமாரை மாடசாமி தன் காலால் மிதித்து கீழே தள்ளி அருகில் கிடந்த கல்லை எடுத்து வந்து தாக்க முயன்றுள்ளார். உடனே மாடசாமியிடம் இருந்து கல்லை பிடுங்கிய மாமனார் சரவணகுமார் அந்த கல்லால் மாடசாமி முகத்தில் எறிந்துள்ளார்.
இதனால் சண்டை முற்றி அப்போது அருகில் நின்ற மாடசாமியின் அக்காள் கணவர் ஆதிலிங்கம் வீட்டின் முன்பு கிடந்த அம்மிக்குலவியை எடுத்து வந்து மாமனார் சரவணகுமார் மாடசாமியை தாக்கி உள்ளார். இதனால் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து இந்த கொலை குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி சரவணகுமார் மற்றும் ஆதிலிங்கத்தையும் கைது செய்தனர்.
English Summary
Man arrested for killing son in law