'சச்சின்' ரீ-ரிலீஸ்: 20 வருடங்களுக்கு பிறகு திரையில் வெள்ளி விழா – இயக்குநர் மிஷ்கின் பகிரும் அனுபவம்!
Sachin rerelease Silver Jubilee on screen after 20 years Director Mysskin shares his experience
2005-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம், வெளியான 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஏப்ரல் 18-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.
இந்த ரீ-ரிலீஸை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 17) இரவு ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் உட்பட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இப்படத்தை முதல் முறையாக பார்த்த மிஷ்கின், திரையரங்கம் வெளியே வந்து செய்தியாளர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்தார்.
“கல்லூரி காலத்திற்கு சென்றது போல இருந்தது. டைம் டிராவல் பண்ணியது போல் உணர்ந்தேன். 27 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் இந்த படத்தை இப்போதுதான் பார்க்கிறேன். சச்சின் படம் ரொம்ப ஜாலியான, அழகான படம். நாம் காதலில் இருக்கும் போது எப்படிப் பசுமை மனசாக இருக்கிறோமோ, அந்த குழந்தைத்தனத்தை நிரம்பக்கொண்டிருந்த படம் இது” என மிஷ்கின் உருக்கமாக கூறினார்.
மேலும், இந்த வாய்ப்பை வழங்கியதற்காக தாணு சாருக்கு நன்றி தெரிவித்த மிஷ்கின், “தாணு சார் என்னை ஒரு மகன் போல பார்த்துக்கொள்கிறார். அவர் தான் என்னை அழைத்து வந்தார்” என்றும் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் தோற்றம் குறித்தும் அவர் பாராட்டுகளை தெரிவித்த மிஷ்கின், “இந்த படத்தில் விஜய் மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். அவருடைய சினிமா கேரியரில், அவரை மிகவும் அழகாக காட்சிப்படுத்திய படம் இது தான் என நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதனுடன், நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதாக வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, “விஜய் சினிமாவை விட்டு போவார் என எனக்கு தோன்றவில்லை. அவர் அரசியல் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு படம் ஆகியாலும் நடிக்க வேண்டும். விஜய் போன்ற நட்சத்திரங்கள் சினிமாவை விட்டு செல்லுவது ரசிகர்களுக்கு பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்தார்.
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்கில் Vijay-யின் 'சச்சின்' படத்தை பெரிய திரையில் அனுபவிக்க முடிவது, ரசிகர்களுக்கு ஒரு நாஸ்டால்ஜிக் அனுபவமாக அமைந்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது, அனைத்து சினிமா ரசிகர்களும் படம் மீதான காதலால் திரைக்கு நேரில் சென்று ரசிக்கின்றனர்.
English Summary
Sachin rerelease Silver Jubilee on screen after 20 years Director Mysskin shares his experience