வேளாண் பட்ஜெட்டை 'வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட்' என கேலி செய்வதா? - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
Minister MRK Panneer Selvam reply to PR Pandian
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 3 வருடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வெறும் தென்னங்கன்று மட்டும் வழங்கியதாக கூறுவது திட்டத்தின் தனித்தன்மையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களின் பிதற்றலாகும்.
திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்கா அமைப்பது என்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.
இதுபோன்ற திட்டங்கள் செயல்வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும்போது தான் முழு பலனும் விவசாயிகளுக்கு சென்று சேரும். கடந்த வேளாண் பட்ஜெட்டில் வாசித்த பல திட்டங்கள் இந்த ஆண்டிலும் வார்த்தை மாறாமல் படித்ததாக கூறுவது நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படிக்காமல் கருத்து கூறுவது முறையல்ல.
மதிப்பு கூட்டல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர்.
விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள் ஏதும் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தினால் அதனை வரவேற்க இந்த அரசு எப்போதும் தயாராக உள்ளது.
அதை விடுத்து 'வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட்' என்று கூறுவது வேளாண்மையை பற்றி சற்றும் தெரியாமல் பட்ஜெட் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேசுபவர்களின் கருத்தாக இருக்கலாம்.
இல்லை முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.
முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர்.பாண்டியன் எந்தவித ஆக்கப்பூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்துவிட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது இல்லை" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister MRK Panneer Selvam reply to PR Pandian