தமிழகத்தில் சிகரெட் லைட்டருக்குத் தடை - அமைச்சர் தங்கம் தென்னரசு.!!
minister thangam thennarasu info ban cigarette lighter
இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேசியதாவது:- "தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்ததாக ஏழை பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக தீப்பெட்டித் தொழில் உள்ளது.
அந்த தொழிலுக்கு சிகரெட் லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் லைட்டர் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதேபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும்" என்றுத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: "தென் மாவட்டங்களில் கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பிரதான தொழிலாக விளங்குகிறது. ரூ.20-க்கு கீழ் லைட்டர் விற்கப்படுவதால் பெண் தொழிலாளர்கள் உள்பட, தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது.
லைட்டர் விற்பனையால் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்பதை அரசு அறியும். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், சிகரெட் லைட்டர்களும் அடங்கும் என்பதால் தமிழகத்தில் லைட்டர் விற்பனைக்கு தடை செய்வது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister thangam thennarasu info ban cigarette lighter