திருக்குறள் பற்றி தவறான கருத்தை ஆளுநர் பரப்பி வருகிறார் - மதிமுக வைகோ பேட்டி..!
mtmk vaiko press meet
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி "திருக்குறள் உலகிற்கான முதல் நூல்" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது, “மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் நூல் திருக்குறள். ஆனால் அது ஆன்மீகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்தும் பேசுகிறது. இந்நிலையில், திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை நூலாக மட்டும் காட்ட நினைப்பது தவறு.
நம் நாட்டின் ஆன்மீக சிந்தனைகளை கொண்ட நூல் தான் திருக்குறள். இது பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டபோது, உண்மையான அர்த்தத்தை விளக்கவில்லை. திருக்குறளின் உண்மையை எடுத்துரைக்கும் வகையில் அதனை மொழிபெயர்க்க வேண்டும்.
இதையடுத்து, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் சரியாக மொழிப்பெயர்க்கவில்லை. ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதனை தவறாக மொழிபெயர்த்துள்ளார். மேலும் திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருக்குறள் இந்தியாவின் அடையாளம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ இதுகுறித்தது தெரிவித்ததாவது,
'திருக்குறள் குறித்து தவறான தகவல்களை ஆளுநர் பரப்பி வருகிறார். 14 மசோதாக்களுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டுள்ளார்' என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே நேற்று முன்தினம் மதிமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ''தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்.
இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கிறது என்பதை மறந்துவிட்டு இவராக ஒரு கொள்கையை சொல்கிறார், இவரே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கிறார், இவரே பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கூட்டத்தை போடுகிறார், இவரே சட்டங்களை அறிவிக்கிறார், அப்படி என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி எதற்கு'' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.