செங்கல்பட்டு || அக்கா வீட்டிலேயே கைவரிசையை காட்டிய தங்கை கைது.!
near chengalpattu woman arrested for robbery
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியம் நாஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி பச்சையம்மாள். பச்சையம்மாளின் தங்கை ராஜேஸ்வரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் திருகாளிமேடு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி, வேளாங்கண்ணி மேரி என்பவருடன் தனது அக்காள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு உடனே புறப்பட்டனர். அப்போது, அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்ட பச்சையம்மாள் பீரோவை திறந்து பார்த்தார். அதில் இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 1¼ பவுன் தங்கச்சங்கிலி ஒன்றும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பச்சையம்மாள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தலைமை காவலர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியையும் வேளாங்கண்ணி மேரியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
அப்போது இருவரும் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்த 6 பவுன் நகையை போலீசார் மீட்டு பச்சையம்மாளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக இருவரையும் கைது செய்த உத்திரமேரூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
English Summary
near chengalpattu woman arrested for robbery