திண்டுக்கல் : மதுபானக்கடையில் ரத்தத்தோடு தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர் - காரணம் என்ன?
near dindukal young man protest with blood in wine shop
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் மதுபான கடைக்கு அருகில் உள்ள பாரில் நான்கு இளைஞர்கள் மது அருந்துவதற்காக சென்றுள்ளனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் சில நேரத்தில் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் மிகக் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். அப்போது, கொள்ளம்பட்டறையை சேர்ந்த கஸ்பா ராஜா என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதாம் உசேன் என்பவரின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
இதனால், பலத்த காயமடைந்த சதாம் உசேன் ரத்தம் வழிய மதுபான கடையின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்தத்தோடு தர்ணாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சதாம் உசேனை மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறுமாறு அறிவுறுத்தினார்கள்.
ஆனால், அதற்கு சதாம் உசேன் மறுப்பு தெரிவித்து என்னை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, போலீசார் சம்பவம் குறித்து சதாம் உசேனின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, சம்பவ இடத்திற்கு வந்த சதாம் உசேனின் அண்ணன் அவரை வலுகட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி முதல் உதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்
அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்தத்தோடு இளைஞர் ஒருவர் மதுபான கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
near dindukal young man protest with blood in wine shop