சார் - பதிவாளர் அலுவலகங்களில் அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர்; புதிய நடைமுறை..! - Seithipunal
Seithipunal


சார் - பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது அனுமதி அட்டை பயன்படுத்துவதை கட்டாயமாக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. அதாவது  'டோக்கன்' பெற்றவர்கள் மட்டுமே உள்ளே செல்லும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

582 சார் பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக தமிழகத்தில்  பத்திரப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதில், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் குறித்த விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, அடிப்படை விபரங்கள் சரியாக இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்வதற்கான நேரம் ஒதுக்கப்படுகிறது. இதற்கான டோக்கன்கள், 'ஆன்லைன்' முறையில் வழங்கப்படுகின்றன.

இதன்படி, டோக்கன் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சார் - பதிவாளர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், சமீப நாட்களாக, டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது, வேறு நபர்களும் உள்ளே செல்வதாக புகார்கள் வ்ழுந்துள்ளன.

அத்துடன், சில இடங்களில் இவ்வாறு வரும் வெளியாட்கள் அலுவலகத்திற்குள் புகுந்து சார் - பதிவாளர்களை  தாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன. அதனால், பணியிடத்தில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று, சார் - பதிவாளர்கள் முறையிட்டனர்.

இதனை கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவின் போது, சம்பந்தம் இல்லாத நபர்கள் அலுவலகத்துக்குள் வருவதை முழுமையாக தடை செய்ய, பதிவுத்துறை முடிவு செய்து, இதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. 

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''பத்திரப்பதிவின் போது சம்பந்தம் இல்லாத நபர்களை, அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என, ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறோம். இருப்பினும், வெளியார் நுழைவு தொடர்கிறது.

இந்நிலையில், சென்னை அடையாறு சார் பதிவாளர் அலுவலகம், மாதிரி அலுவலகமாக சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், சொத்து வாங்குவோர் உள்ளே செல்ல, 'அனுமதி அட்டை' வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்படி, சொத்து வாங்குவோர் தங்களுக்கான டோக்கன் விபரங்களை, அலுவலகத்தின் முகப்பில் உள்ள பணியாளரிடம் காட்டினால், அவர் ஒரு கார்டு கொடுப்பார். அதை காட்டினால் மட்டுமே, சார் - பதிவாளர் இருக்கும் இடத்துக்கு செல்வதற்கான கதவு திறக்கும்.

மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதை அடுத்து, அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும் இதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.'' என்று கூறியுள்ளார்.


registration department 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Only those with registration department permission cards will be allowed inside


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->