விரக்தியின் உச்ச நிலை! பெருத்த ஏமாற்றம்! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை விரக்தியின் உச்ச நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்து உள்ளதாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் வாக்குறுதிகளான நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் போன்றவை இந்த ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தற்போதுள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 2021ம் ஆண்டு திமுகவினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையே குறைவு என்ற நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இன்னமும் 2021ம் ஆண்டு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட திமுக அரசு அறிவிக்காதது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,115 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், கேரளாவில் 2,820 ரூபாய் வழங்கப்படுகிறது. 

பேருந்துக் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றிற்கு எல்லாம் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் திமுக அரசு இந்த விஷயத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரியது.

இதேபோன்று, கரும்பினை எடுத்துக் கொண்டால் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள டன் ஒன்றுக்கு 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டாலும், குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கினால்தான் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கரும்பு விவசாயிகள் கருதுகிறார்கள். 

கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், தனியார் சர்க்கரை ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெற்றுத் தந்திட உரிய தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதியை திமுக தேர்தல் சமயத்தில் அறிவித்தது. இருப்பினும், நிலுவைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வேளாண் தொழில் வளர்ச்சி அடைய வேண்டுமானால், வேளாண் தொழிலில் நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையை போக்குவது அவசியம். இதற்கான நடவடிக்கை குறித்து வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லை. 

மாறாக, வேளாண்மையை இயந்திரமயமாக்கும் முயற்சியை முன்மொழிந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது, வேளாண் தொழிலில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை போக்க முடியாது என்ற நிலைக்கு அரசு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பல கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புகள் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தாலும் அவை எல்லாம் இயல்பான ஒன்றுதான். 

இந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் மகிழும் அளவுக்கும் ஏதுமில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளை விரக்தியின் உச்ச நிலைக்கு அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளது" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops say about agriculture budget 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->