திருப்பூர் | நில அபகரிப்பு... பல்லடம் அருகே தீ குளிக்க முயன்ற விவசாயி!
Palladam near farmer tried to set fire
பல்லடத்தை சேர்ந்த விவசாயி தனது நிலத்தை மீட்டு தரக்கோரி பல்லடம் டி.எஸ்.பி.,அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு:
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி. இவரது மகன் ஜெகநாதன்(வயது 50). விவசாயியான இவர் அவருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிவலிங்கத்திடம் அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ஜெகநாதன் பெருமாநல்லூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் விவசாய நிலத்தை அடமானம் வைத்து ரூ.40 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
அந்த பணத்தை வைத்து ஏற்கனவே வாங்கிய சிவலிங்கத்தின் கடனை அடைத்து விட்டார். பெருமாநல்லூர் நிதி நிறுவனத்திற்கு கடன் தொகைக்காக கிரைய உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளார்.
கடன் தொகை செலுத்தாவிடில் நிலம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகிவிடும் என்ற ஒப்பந்த அடிப்படையில் எழுதப்பட்டு வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டினார்.
அதனை தொடர்ந்து வங்கியில் கடன் பெறுவதற்காக, கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு நிதி நிறுவனத்திடம் கேட்டபோது, இன்று நாளை என காலம் தாழ்த்திய அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஜெகநாதன் ஒப்பந்த சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது அதில் அவரது நிலத்தை, கடந்த 2020 ஆண்டு வேறு ஒருவருக்கு போலியான பத்திரங்கள் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் கடன் வாங்கிய நிதி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெகநாதன் பல்லடம் போலீஸ் துணை எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்ற போது திடீரென அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றுள்ளார்.
அப்போது அருகே இருந்த உறவினர்கள் மற்றும் காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அதனை தொடர்ந்து பல்லடம் துணை எஸ்.பி.,ஜெகநாதனிடம் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, இனி இது போன்ற காரியங்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.
English Summary
Palladam near farmer tried to set fire