பாஷினி மொழிபெயர்ப்பு செயலியை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும்..அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு!
Pashini translation app should be implemented in Puducherry Lieutenant Governor directs officials
பாஷினி மொழிபெயர்ப்பு செயலியை விரைவில் புதுச்சேரியில் செயல்படுத்தும் விதமாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் “பாஷினி“ மொழிபெயர்ப்புத் திட்ட அதிகாரிகள் குழு துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன் ஆளுநர் மாலையில் சந்தித்தது. சந்திப்பின்போது, தேசிய மொழிபெயர்ப்பு திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பாஷினி மொழிபெயர்ப்பு செயலியை புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலர் முத்தம்மா, மற்றும் தேசிய தகவலியல் மைய இயக்குநர் கோபி விஷ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.மத்திய அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள “பாஷினி“ மொழிபெயர்ப்பு செயலி பல்வேறு மொழிகள் பேசும் இந்திய மக்கள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பாஷினி மொழிபெயர்ப்பு செயலியை- ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்து வடிவில் மொழிபெயர்க்கவும், ஒரு மொழியில் பேசுவதை மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கவும், ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசுவதை எழுத்து வடிவில் கொண்டுவரவும் பயன்படுத்தலாம். இதன் மூலமாக மத்திய அரசின் திட்டங்கள், அனைத்து மொழி பேசும் மக்களையும் சென்றடைய வழி ஏற்படும்.
அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் அவரவர் தாய்மொழியில் எடுத்துக்கூற உதவியாக இருக்கும். ஒரு மாநிலத்தில் செயல்படுத்தப்படும் முக்கியமான, முன்னோடியான திட்டங்கள் அடுத்த மாநிலத்தை சேர்ந்த மக்கள் அவரவர் மொழிகளில் தெரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
பாஷினி மொழிபெயர்ப்பு செயலியின் செயல்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்த துணைநிலை ஆளுநர்,
• “பாஷினி“ செயலியை புதுச்சேரி மக்கள் பயனடையும் வகையில் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
• செயலியை விரைவில் புதுச்சேரியில் செயல்படுத்தும் விதமாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த திட்டம், முன்னோட்டமாக புதுச்சேரியில் செயல்படுத்தபட இருக்கிறது. திட்டச் செயலியை மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு இலவசமாக வழங்க இருக்கிறது. அதற்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை மத்திய அரசு வழங்கும். புதுச்சேரி மாநிலம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளில் பரவி இருப்பதால் அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை சரியான முறையில் மக்கள் தங்கள் தாய்மொழியிலேயே புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.
English Summary
Pashini translation app should be implemented in Puducherry Lieutenant Governor directs officials