சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி தண்டம் விதித்துள்ள, சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்டி, மீனவர்களை மீட்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதமும், ஒரு மீனவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கும் நோக்கத்துடன் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 21 -ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 37 மீனவர்களும்,  புதுக்கோட்டையிலிருந்து கடந்த மாதம் 4 மற்றும் 7-ஆம் தேதிகளில் மீன் பிடிக்கச் சென்ற 18 மீனவர்களும் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 

அவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பூம்புகார் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரும்  விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேரில் ஒருவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

அதேபோல்,  மீனவர்களுக்கு  தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர்களால் செலுத்த முடியாததால் அவர்களும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள்  22 பேருக்கு   இலங்கை  ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது. அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். இராமேஸ்வரம் மீனவர்கள் மூவருக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

இவர்களைப்போல  மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள்  அபராதம் விதிக்கப்பட்டும்,  சிறை தண்டனை விதிக்கப்பட்டும்  இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் ஏழ்மையில் வாடும் நிலையில், அவர்களால் அபராதத்தை செலுத்த முடியாது  என்பதால் அந்த மீனவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது தெரியவில்லை.

வங்கக்கடலில் மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை 6 மாதங்கள், ஓராண்டு என சிறையில் அடைத்து வந்த இலங்கை நீதிமன்றங்கள்  இப்போது குறைந்தபட்ச  சிறை தண்டனையை  ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தியுள்ளன.  இது தவிர கோடிக்கணக்கில் தண்டமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே  பலமுறை நான் குறிப்பிட்டதைப் போல இது தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒழிக்கும் நடவடிக்கை தான். இதற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.  இல்லாவிட்டால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து  வாழவே முடியாத நிலை உருவாகும்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. 

அதனால் தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக தமிழக மீனவர்களை சிங்கள அரசு கைது செய்வதையும், சிறையில் அடைப்பதையும் இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தண்டம் விதிக்கப்பட்டும், சிறை தண்டனை விதிக்கப்பட்டும் இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களின் படகுகளுடன்  விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்து, அதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத்  தீர்வு காண நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Condemn to Sri Lankan Govt India Fisherman issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->