திமுக அரசு படுதோல்வி! புள்ளி விவரங்களுடன் வெளியான பெரும் அதிர்ச்சி அறிக்கை! - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் 10 நாட்களுக்குப் பிறகு தான் வழங்கப்பட்டது. 

ஆனால், கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக 2021&ஆம் ஆண்டு தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றியிருந்தால் கல்வி மற்றும் சுகாதாரத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உயர்ந்து  இருக்கும். எந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் நிதி ஒரு தடையாக இருந்திருக்காது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

‘இதுகுறித்த அவரின் அறிக்கையில், "மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (Gross State Domestic Product-GSDP) கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது (பக்கம் &126). இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020-21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாகவும், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு  ரூ.15 ஆயிரத்துக்கு 863 கோடியாகவும் இருந்தது. இது 2020-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%, 0.76% ஆகும்.

2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.84 லட்சம் கோடியாக (One Trillion US Dollars) இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நிதி ஒதுக்கீட்டின் அளவு 3 மடங்கு அதிகரிக்கப்படும் என்றால் 2030-ஆம் ஆண்டில் கல்விக்கான ஒதுக்கீடு ஒட்டுமொத்த உள்நாட்டு மதிப்பில் 4.95%, அதாவது ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் கோடியாகவும்,  சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 1.92%, அதாவது ரூ. ஒரு லட்சத்து 61 ஆயிரம் கோடியாகவும்  இருக்கும்.

அதையே நடப்பாண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாகவும், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 60 ஆயிரத்து 577 கோடி ரூபாயாகவும் இருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் கல்விக்கு ரூ.44 ஆயிரம் கோடியும், சுகாதாரத்திற்கு ரூ.20,198 கோடியும் மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு ஆகும். அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. அதேபோல், அதிமுக ஆட்சியில் 0.76% ஆக இருந்த சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு 0.64% ஆக குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் சீரழிந்து வருவதற்கு அந்தத் துறைகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததே காரணம்.

1964-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட கோத்தாரி ஆணையம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அதை விட குறைவாக 4.95% தான் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அதைக் கூட திமுக அரசால் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களை  நியமிக்க முடியவில்லை. 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றரை ஆண்டுகளில் பள்ளிகளுக்கு 2027 ஆசிரியர்கள் மட்டும் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகளுக்கு ஒரே ஓர் ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் முதன்மையான உயிர்காக்கும் மருந்துகள் கூட இல்லை. அதற்குக் காரணம் இரு துறைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது தான். 

இரு துறைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாயாகவும், சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 50 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Say About DMK Govt Fail Report


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->