லாபம் ரூ.559.42 கோடி! என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணிநிலைப்பு செய்ய வேண்டும் = டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


என்.எல்.சி நிறுவனத்தின் இலாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதற்கு அதன் செயல்பாடுகள் காரணமல்ல... மாறாக, தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதே காரணமாகும். தொழிலாளர்களின் உழைப்பை மதிக்க வேண்டிய என்.எல்.சி, அதை அங்கீகரிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாட்டாளி மக்கள் வழங்கிய நிலங்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. 

2023-24ஆம் ஆண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,787 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,846 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் என்.எல்.சி நிறுவனத்தின் வருவாய் ரூ.3,376 கோடியாகவும், லாபம் ரூ.559.42 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.

எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனிதவளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட  வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதிக லாபம் ஈட்டியுள்ள என்.எல்.சி நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. 

என்.எல்.சி நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு காரணமாகத் திகழும் அதன் தொழிலாளர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்குக் கூட என்.எல்.சி நிறுவனம் மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்யாமல், அவர்களை ஒப்பந்த ஊழியர்களாகவே வைத்திருந்து அவர்களுக்கு நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட பாதிக்கும் குறைவான ஊதியத்தை வழங்குவது, ஓய்வுக்குப் பிந்தைய உரிமைகளை வழங்க மறுப்பது, அளவுக்கு அதிகமாக வேலை வாங்குவது ஆகியவற்றின் மூலம் என்.எல்.சி நிறுவனம் பெரும் பணத்தை மிச்சம் செய்கிறது. என்.எல்.சியின் இலாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலும் ஒரு காரணம்.

என்.எல்.சி நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 21,000 ஆக இருந்தது. அப்போது ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 3,000 மட்டும் தான். மீதமுள்ள 18,000 பேரும் நிரந்தரப் பணியாளர்கள் தான். அவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்தனர். அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும்,  ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பும் வழங்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனம் என்ற முறையில் இவற்றை வழங்க வேண்டியது என்.எல்.சியின் கடமை ஆகும்.

ஆனால், காலப்போக்கில் தனது கடமைகள் அனைத்தையும் என்.எல்.சி காற்றில் பறக்கவிட்டு விட்டது. இன்றைய சூழலில் என்.எல்.சியின் பணியாளர் எண்ணிக்கை 16 ஆயிரமாக குறைந்து விட்டது. என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும், மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில், அதே அளவுக்கு பணியாளர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும். 

ஆனால், அதற்கு மாறாக, கிட்டத்தட்ட 5000 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 5000 பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. அதேநேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திலிருந்து மும்மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

ஒப்பந்த தொழிலாளர்களில் பலருக்கு குறுகிய நேர பணி என்ற பெயரில் ரூ.450 மட்டும் தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த மக்களுக்குக் கூட இதே நிலை தான். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1000 தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நிலையில், அவர்களின் இடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டிருந்தால், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்கப்பட்டிருக்கும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்களின் உழைப்பு சுரண்டப் படும் கொடுமைக்கு முடிவு கட்டப்படும். ஆனால், அதை செய்ய என்.எல்.சி நிர்வாகம் தயாராக இல்லை.

ஐ.டி.ஐ, பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு தான் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 

ஆனால், இப்போது அப்பணிகளும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவும் ஒரு வகையான உழைப்புச் சுரண்டல் தான் என்பது ஒருபுறமிருக்க, இதனால், எந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை.

ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் ஒருவர் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்த பிறகு தான் இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர முடிகிறது. அதன்பின் 10 ஆண்டுகள் பணி செய்தால் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு கிடைப்பதில்லை. 

அதனால், ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் பலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தும் கூட ஒப்பந்தத் தொழிலாளராகவே ஓய்வு பெறும் அவலநிலை நிலவுகிறது. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். 

அதற்காக ஒப்பந்தத்  தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்க்க வேண்டும். இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல்  உடனடியாக பணி நிலைப்பு செய்ய என்.எல்.சி  நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Say About NLC Temporary Staff issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->