100 நாட்களில் 100 கோடி பரிசு! வலைவீசும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்! வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு! மருத்துவர் இராமதாஸ் பரபரப்பு ட்வீட்! - Seithipunal
Seithipunal


100 நாட்களில் 100 கோடி பரிசு என வலைவீசி மக்களை இழுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்: இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதளபக்கமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. தீபஒளி திருநாள், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றையொட்டி அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு ரூ. 100 கோடி பரிசு வெல்லலாம் என்று ஆசை காட்டி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது.

இதன் விளைவு என்னவாக இருக்குமோ? என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. தொடக்க காலங்களில் லட்சங்களில், பரிசுத்தொகையை அறிவித்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், பின்னர் கோடிகளுக்கு மாறின. இப்போது ரூ.100 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு பேருருவம் எடுத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டதாகும். கடந்த நிதியாண்டில் ரூ.1070 கோடி வருவாய் ஈட்டிய இந்த நிறுவனம் நடப்பாண்டில் அதை இரட்டிப்பாக்கும் என்றும், அதற்கு முதன்மைக் காரணம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து ஓர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது என்றால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் பணம் எத்தனை ஆயிரம் கோடி சூதாட்டத்தின் மூலம் சுருட்டப்படும்; அதனால் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு ஆகும்.

நிலத்தில் வெட்ட வெட்ட முளைக்கும் களைகளைப் போல, ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய, தடை செய்ய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 11 மாதங்களில் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகள் அதிகரிப்பதையும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வருவதையும் தடுக்க முடியாது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழக அரசின் மேல்முறையீடு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இதை சுட்டிக்காட்டி ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன.

இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk founder doctor ramadoss x


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->