அடுத்தடுத்து 6 பேர் படுகொலை! சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி - டாக்டர் இராமதாஸ் கண்டனம்!
PMK Ramadoss Condemn to TNGovt for Law and Order
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெளியப்பன், இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் மோகன், கோவை சோமனூர் ஆத்துப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல், கோவை உக்கடம் கெம்பட்டியைச் சேர்ந்த இன்னொரு கோகுல், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னபாறையூரைச் சேர்ந்த பழனி, சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என 6 பேர் நேற்று ஒரே நாளில் கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எவரின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-22ஆம் ஆண்டில் 1558 படுகொலைகள், 2022-23ஆம் ஆண்டில் 1,596 படுகொலைகள் மற்றும் 18 கூலிப்படை கொலைகள் நடந்துள்ளன. இவற்றை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
2023-24 ஆம் ஆண்டில் 1600-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் படுகொலைகளைத் தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று கூறினால், முன்பகையால் நடக்கும் கொலைகளை எவ்வாறு தடுப்பது? என்றும், பழைய ரவுடிகளை கண்காணித்தால் புதிய ரவுடிகள் உருவாகிறார்கள் என்றும் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறுகிறார். சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதையே சட்ட அமைச்சரின் கருத்து காட்டுகிறது.
சென்னையில் தொடங்கி தென்காசி வரை படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய கொடூர படுகொலைகள் குறித்தெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றே தெரியவில்லை.
தமிழ்நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ளாமல் தம்மைச் சுற்றி மாய வளையத்தை அமைத்துக் கொண்டு தமிழகம் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மக்கள் படும் பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். அவர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கொலைகளும், குற்றங்களும் அதிகரிக்க முதன்மைக் காரணம் மது மற்றும் கஞ்சா போதைக் கலாச்சாரம் தான். படித்து வேலைக்கு செல்ல வேண்டிய வயதில் உள்ள இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி கூலிப்படையில் சேர்ந்து கொலை செய்யும் கொடுமை தமிழகத்தில் நிகழ்கிறது.
இதற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதுடன் , கஞ்சா கலாச்சாரத்திற்கும் முடிவு கட்ட வேண்டும். அதன் மூலம் படுகொலைகளை குறைத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Ramadoss Condemn to TNGovt for Law and Order