தமிழக மக்களுக்கு மற்றுமொரு "ஷாக்" - ரேஷன் பொருட்களின் விலையும் உயர்கிறது - மின் கட்டணத்தைத் தொடர்ந்து அரசின் அதிரடி நடவடிக்கை..!!
Price Hike Of Essential Things in Ration Shops
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசு உயர்த்தப் போவதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் தங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர்.
மேற்கண்ட பொருட்களை எல்லாம் தமிழக அரசு வெளியில் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி 1 லிட்டர் பாமாயில் ரூ. 25 க்கும், பருப்பு 1 கிலோ ரூ. 30 க்கும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை உள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளிச் சந்தையில் பாமாயில் 1 லிட்டர் ரூ. 95 க்கும், பருப்பு 1 கிலோ ரூ. 155க்கும் கொள்முதல் செய்து மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாததால், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக கடந்த 2 மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயிலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் இவற்றைப் பெற முடியாமல் அவதிக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Price Hike Of Essential Things in Ration Shops