அடையாளம் தெரியாத தண்ணீரில் மிதந்து வந்த ஆண் சடலம் மீட்பு.!
Recovery of the body of an unidentified man floating in the water..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி அருகே களத்தூர் - கொன்றைக்காடு இடையே கல்லணை கால்வாயின் கிளை வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் மிதந்து வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் கொன்றைக்காடு கிராம நிர்வாக அலுவலரான பெரியநாயகிக்கு தகவல் அளித்தனர்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் பெரியநாயகி, கிராம உதவியாளர்கள் விஜயா, அம்பிகா ஆகியோர் சடலத்தை நேரில் சென்று பார்த்தனர். பிறகு பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ரஜினி, சுப்பையன், நீலகண்டன், சந்தனகுமார் மற்றும் கொன்றைக்காடு சமூக ஆர்வலர்களான கணேசன், கர்ணன் ஆகியோர் ஆற்றில் இறங்கி சடலத்தை மீட்டு வந்தனர்.
பின்னர், மீட்கப்பட்ட சடலத்தை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மீட்கப்பட்ட இந்த சடலம் சுமார் 35 வயதுடைய ஆண் சடலம் என்பது தெரியவந்தது.
மேலும், இவர் தண்ணீரில் விழுந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Recovery of the body of an unidentified man floating in the water..!