வாயில் சிகரெட்.. கையில் சரக்கு.. லியோ படத்துக்கு ஆப்பு வைத்த RTI செல்வம்..!!
RTI Selvam complains against Leo movie song
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே நடிகர் விஜயின் பிறந்த முன்னிட்டு 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் "நா ரெடி" என தொடங்கும் லியோ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது.
இந்த பாடல் வெளியானதில் இருந்து சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் விஜய் சிகரெட் பிடிப்பது போன்றும், நடன கலைஞர்கள் கையில் மது கோப்பைகளுடனும் இந்த பாடலில் இடம்பெற்று இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் பலர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அரசியலில் களமிறங்க நினைக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடத்தினார். நடிகர் விஜயின் இந்த முன்னெடுப்பு பலரால் பாராட்டப்பட்டாலும் தனது படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகைப் பழக்கத்தையும், மது பழக்கத்தையும் ஊக்குவிக்கும் விதமாக நடிப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் லியோ பட பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் லியோ படத்தின் நா ரெடி பாடலை தடை செய்ய வேண்டும்.
போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதாக அந்த புகாரில் குற்றம் காட்டியுள்ள அவர் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
English Summary
RTI Selvam complains against Leo movie song