மதுரை : சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 'புதுப் பொலிவுடன்' தயாராகும் சாத்தையார் அணை..!!
Saththaiyar Dam To be renewed in Madurai
மதுரை அருகே உள்ள சாத்தையார் அணை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதுப் பொலிவுடன் தயாராவதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.
மதுரை பாலமேட்டிற்கு அருகே உள்ள சாத்தையார் அணை, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சியில் கட்டப் பட்டது. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த சாத்தையார் அணையானது 2500 ஏக்கர் பரப்பளவிற்கு பாசன வசதியைத் தருகிறது.
சிறுமலை, வயிற்றுமலை, செம்போத்துக்கரடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த அணையின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாத்தையார் அணை நிரம்பி வழிவதால் விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன.
இதனிடையே அதிமுக ஆட்சியில் ரூ, 44 கோடி மதிப்பில் பொருத்தப்பட்ட ஷட்டர்கள் ஓட்டை விழுந்து அதனால் தண்ணீர் வீணாகி வருவதால், தற்போது ரூ. 1.10 கோடி மதிப்பில் ராட்சத ஷட்டர்கள் பொருத்தும் பணியை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.
இந்த ராட்சத ஷட்டர்களைத் தூக்குவதற்குப் பயன்படும் ஜெனெரேட்டர்களும் பழுதாகி உள்ளதால், அவற்றையும் புதிதாக மாற்றும் பணியும் நடந்து வருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த அணைப் பகுதியில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மழைக் காலம் தொடங்குவதற்கு முன் இந்தப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி இப்பகுதி விவசாயிகள் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணித் துறைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகத் திகழும் இந்த சாத்தையார் அணை, மதுரை மாவட்ட மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கும் இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Saththaiyar Dam To be renewed in Madurai