வினாத்தாள் கசிந்தால் கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!
school education department order action against question paper leak
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு முடிந்ததும், மற்ற வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அதாவது 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு இறுதித் தேர்வின் போது, சில தேர்வுகளுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடப்பாண்டில் இறுதித் தேர்வில் அதிக கவனமுடன் செயல்படவேண்டும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 'ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதித் தேர்வுகளின்போது தேர்வுக்குரிய வினாத்தாள்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துவிடாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதேநேரம் வரும் காலங்களில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள், அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மீது கடுமையாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே தேர்வுப் பணிகளில் சுணக்கம் இன்றி கவனமாக செயல்படுவதோடு, ஆண்டு இறுதித் தேர்வை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காதவாறு முடிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
school education department order action against question paper leak