திருவேங்கடம் என்கவுண்டர்: உண்மைக்குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் - சீமான்!
Seeman Condemn to TNPolice AND DMK govt for Thiruvengadam Encounter
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், விசாரணைக் கைதி திருவேங்கடம் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது, உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான திமுக அரசின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடம், சென்னை - மாதவரத்தில் காவல்துறையினர் நடத்திய சுப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
காவல்துறை தரப்பில் இந்த என்கவுண்டர் குறித்து தெரிவிக்கையில், கொலையாளிகளில் ஒருவரான திருவேங்கடத்தை, விசாரணைக்காக இன்று காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே செல்லும் போது திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், புழல் வெஜிடேரியன் நகரில் உள்ள தகர கொட்டாயில் பதுங்கி இருந்த திருவேங்கடத்தை போலீசார் சுற்றி வளைக்கும் போது, அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட, இதில், வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்து பலியானார்.
இந்த சம்பவம் குறித்து சீமான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி? முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?
இந்திய அளவிலான கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலையைத்தான் தடுக்க முடியவில்லை. குறைந்தப்பட்சம் அதில் சரணடைந்த விசாரணை கைதியையும் காப்பற்ற முடியவில்லை என்பது வெட்கக்கேடானது.
வன்மையான கண்டனத்துக்குரிய இந்நிகழ்வு திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு திறனற்றதாகியுள்ளது என்பதையும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையுமே காட்டுகிறது.
உண்மையை மூடி மறைப்பதற்காக காவல்துறையினரே போலியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பல வழக்குகளில் மெய்ப்பிக்கபட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சரண்டைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற சந்தேகம் தற்போது விசாரணை கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அதிகமாகிறது.
தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் இரண்டு திமுக நிர்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் உட்பட அனைவரும் வலியுறுத்தி வந்த நிலையில், விசாரணை தொடங்கும் முன்பே நடத்தப்பட்டுள்ள இத்துப்பாக்கிச்சூடு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு நடத்திய நாடகம்தான் இப்படுகொலையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆகவே, மனித உரிமைகள் ஆணையமும், மாட்சிமை பொருந்திய நீதிமன்றமும் விசாரணைக்கைதி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தீர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டுமெனவும், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Seeman Condemn to TNPolice AND DMK govt for Thiruvengadam Encounter