சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி!...தலித் குடியிருப்பில் புகுந்து கொடூர தாக்குதல்!...தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், நாயக்கன்பட்டியைச் சார்ந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் தீபாவளி தினத்தன்று பூச நாயக்கன்பட்டி தலித் அருந்ததியர் குடியிருப்பிற்கு அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்த தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர் எங்கள் குடியிருப்பிற்கு அருகில் அமர்ந்து மது அருந்த வேண்டாம். சற்று தள்ளிப் போங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள்  விஜய்யை சாதியைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளில் பேசிக் கொண்டே கடுமையாகத் தாக்கியுள்ளனர். அப்படியும் ஆத்திரம் தீராத சாதிய வாதிகள் 10க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு விஜய்யின் உறவினரான
சதீஷ் குமார் வீட்டின் மேற்கூறையின் ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகளை உடைத்து, வீட்டுக்குள்ளே குதித்து, சதீஷ்குமாரின் புகைப்படத் தொழிலுக்காக வைத்திருந்த கம்ப்யூட்டர் மற்றும் இதர உபகரணங்களையும் டிவி, செட்டப் பாக்ஸை ஆகிய பொருள்களையும் உடைத்துள்ளனர்.

அதோடு சதீஷ்குமார், அவரது துணைவியார், தாயார் ஆகிய மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அச்சமயத்தில் அவ்வழியாக காரில் வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஜெயக்குமார் என்பவர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ஜெயக்குமாரின் காரின் கண்ணாடியை உடைத்து அவரைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர் கை எலும்பு முறிக்கப்பட்டு, முகத்தில் கொடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரைப் பாதுகாக்க முயன்ற அவரது உறவினர்கள் வெங்கடாசலம் மற்றும் செல்வராசு ஆகியோரையும்   கல்லால் அடித்து  காயப்படுத்தினர்.

காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜெயக்குமார் கொடுங்காயங்களுடன் கோவை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் சிறார் இல்லத்திலும், மற்றவர்கள் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இக்கொலை பாதகச் செயலை வன்மையான கண்டிப்பதோடு, சேதப்படுத்தப்பட்ட பொருள்களை துல்லியமாக மதிப்பீடு செய்து உரிய நிவாரணத்தையும் குடியிருப்புக்கு உரிய பாதுகாப்பையும், வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும்  கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock staged in salem dalit residence was attacked brutally tamil nadu untouchability abolition leader condemns


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->