புதிய தலைமைச் செயலாளர் ஆகிறார் சிவதாஸ் மீனா.!! அவரின் முழு விவரம் இதோ..!!
Sivadas Meena becomes new Chief Secretary of TNGovt
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.!!
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக தற்போது இருக்கும் இறையன்பு ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்த புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு 1989 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவதாஸ் மீனா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்பொழுது தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
முதன் முதலில் காஞ்சிபுரம் உதவி ஆட்சியராக பணியை தொடங்கி பின்னர், கோவில்பட்டி உதவி ஆட்சியர், வேலூர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மை செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளையும் பதித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம் செய்வது குறித்தான கோப்புகள் தற்பொழுது ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோப்புகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இன்று அல்லது நாளை மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் பணிக்கு உயர்கல்வித்துறை செயலாளராக இருக்கக்கூடிய கார்த்திகேயன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோன்று பொதுத்துறை செயலாளர் பதவியை கூடுதலாக ஜெகநாதன் கவனித்து வரும் நிலையில் அந்தப் பதவி மனிதவள மேம்பாட்டு துறை செயலாளராக இருக்கும் நந்தகுமாருக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.
அதேபோன்று ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஊரக வளர்ச்சி துறை ஆணையர் பதவிக்கு புதிதாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் முக்கிய துறைகளின் முதன்மை செயலாளர்கள் மாற்றுவதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று தமிழ்நாடு டிஜிபி பதவி வகித்து வரும் சைலேந்திரபாபு ஓய்வு பெற உள்ளதால் அவர் காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாக உள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் உச்சபட்ச பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு நாளை மாலைக்குள் வெளியாக உள்ளது.
English Summary
Sivadas Meena becomes new Chief Secretary of TNGovt