சட்ட விரோத வழக்கு தொடர்பில் ஆவணங்களை தாக்கல் செய்யாத சிறப்பு நீதிபதி; சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்..!
Special judge did not file case documents Chennai High Court condemns
வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத, சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு, 'உபா' என்ற சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜமீல் பாஷா, கோவை மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹூசைன் மற்றும் இர்சாத் ஆகியோரை, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர்.
குறித்த மூன்று பேர் மீதான வழக்கு, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது; இந்நிலையில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கை விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் எடுக்கவில்லை.

இந்நிலையில், குற்றப்பத்திரிகை நகல் கோரி, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜமீல் பாஷா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, குறித்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஜமீல் பாஷாவும், சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான வழக்கை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' 'குற்றவியல் வழக்கை சிறப்பு நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுக்கவில்லை' என்று கேள்வி எழுப்பியதுடன், அதுதொடர்பான விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு, கடந்த மாதம், 21ல் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், பிப்ரவரி 23-இல் விசாரணைக்கு வந்தது. அப்போதும், சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, 'ஜமீல் பாஷா மீதான வழக்கு தொடர்பான ஆவணங்கள், குற்றப்பத்திரிகை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் மனு ஆகியவற்றை, பிப்ரவரி 26-ஆம் தேதி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு, பிப்ரவரி 26-இல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கு ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, குறித்த வழக்கின் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது; வழக்கில் இதற்கு முன் இரண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதற்கு பொறுப்பான எந்த பதிலையும் கூறவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, சிறப்பு நீதிமன்றம் எப்படி புறக்கணித்தது என தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல், இதுபோன்று கவனக்குறைவாக, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கையாண்ட விதத்தை ஏற்க முடியாது. இருப்பினும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மேலும் ஒரு அவகாசம் வழங்குகிறோம் என்றும், அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, உரிய வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Special judge did not file case documents Chennai High Court condemns