இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் அட்டூழியம்: மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்கள் பறிப்பு!
Sri Lankan pirates attack fishermen snatch fishing equipment
வேதாரண்யம் அருகே தமிழக எல்லையில் வெவ்வேறு இடங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி உபகரணங்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.
சமீபகாலமாக தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல் தொடர்கதையாகிவருகிறது,அவ்வப்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி விரட்டுவதும்,அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற சம்பவங்களும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.இந்தநிலையில் இலங்கை கடற்கொள்ளையர்களின் அராஜகம் ஓன்று அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 2 படகுகளில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகை வழிமறித்து மீனவர்களின் படகுக்கு சென்று அவர்களை கத்தி மற்றும் கட்டையால் கடுமையாக தாக்கி உள்ளனர்.
மேலும் படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அரங்கேற்றிய இந்த தாக்குதலில் மீனவர்கள் தலையில் வெட்டுக்காயமும், கையில் கட்டையால் அடித்ததில் காயமும் ஏற்பட்டது.
மீன்கள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிகொடுத்து, உடலில் பலத்த காயங்களுடன் இன்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களை கண்ட சக மீனவர்கள் காயமடைந்த 3 பேரையும் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர்.
இதேபோல், வேதாரண்யம் அடுத்துள்ள பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமார், லட்சுமணன், ஜெகன் ஆகிய 3 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.அப்போது அங்கு வந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வலை, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
பொருட்களையும் இழந்து, உடலில் காயங்களுடன் இன்று காலை பெருமாள்பேட்டை மீனவர்கள் 3 பேரும் கரை திரும்பினர். பின்னர் நடந்தது குறித்து சக மீனவர்களிடம் கூறி வேதனை தெரிவித்தனர்.
English Summary
Sri Lankan pirates attack fishermen snatch fishing equipment